அன்புடன் தமிழ் 2023

“அன்புடன் தமிழ் 2023” இசை நிகழ்வுக்கு கனடியத் தமிழர் பேரவை உங்களை அழைக்கிறது. தமிழ் அறிஞரான ஜி.யு.போப்புக்கு, கனடாவின் பிறின்ஸ் எட்வேர்ட் தீவில் (Prince Edward Island -PEI) அமைந்துள்ள பெடெக் என்ற அவர் பிறந்த கிராமத்தில், நினைவுச்சின்னம் ஒன்றினை அமைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிக்கு உறுதுணையாக, “அன்புடன் தமிழ் 2023” இசை நிகழ்வு நடைபெறுவதைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

கனடியத் தமிழர் பேரவை,தமிழ் மொழிக்கு “போப்” அவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றை நிர்மாணிக்கும் முயற்சியை மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது.

முதன்முறையாகத் திருக்குறளை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் கனடியர் என்பது நமக்குப் பெருமை. இந்நிலையில், கனடியத் தமிழர் பேரவை சிலை அமைக்கப்படவுள்ள நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
PEI மாகாண அரசு அவர் பிறந்த இடமான Bedeque இல் இந்த இடத்தை வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் மூன்று அதிகார மட்டங்களில் உள்ள தலைமையாளர்களோடும் மற்றும் போப் குடும்ப அங்கத்தவர்களோடும், பெடெக் வரலாற்று அருங்காட்சியக நிர்வாகிகளோடும் கனடியத் தமிழர் பேரவை இது குறித்துக் கலந்துரையாடியுள்ளது.
இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கனடியர் ஒருவரை, அவரது தமிழ்மொழிக்கான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக அவரது பிறந்த இடத்தில் நாங்கள் ஒன்றுகூடும்போது, கனடிய ஊடகங்களும், அந்த மண்ணின் மைந்தர்களும் வெளிப்படுத்தவுள்ள உணர்வுமயமான பிரதிபலிப்பை எதிர்கொள்ளுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

ஒரு இலாப நோக்கற்ற தமிழ் அமைப்பாக, நாங்கள் எங்கள் சமூகத்தின் ஆதரவை நம்பியுள்ளோம். எம்முடன் ஒத்துழைக்கவும், வட அமெரிக்காவில் தமிழுக்காக நடைபெறும் வரலாற்று முயற்சிக்கு உங்கள் ஆதரவை வெளிப்படுத்தவும் “அன்புடன் தமிழ் 2023” இசை நிகழ்வு ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். இசை நிகழ்வு, சிலைத் திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் நீங்கள் பங்கேற்பதன் மூலம் இந்த முன்னெடுப்புக்கான உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

Leave a Reply